இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ‘இந்தியாவின் எரிசக்தி மற்றும் தொழில் துறை எதிர்காலத்திற்கு பயன்படும் அரிய பூமி தனிமங்கள்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு காரைக்குடி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் பணியாற்றும் விஞ்ஞானிகளாகிய ஜெயக்குமார், கிரி பாபு கலந்து கொண்டனர்.
ஜெயக்குமார் பேசுகையில்: மின்சார வாகனம், காற்றாலைகள், சோலார் பேனல்கள், நவீன மின்னணு சாதன உற்பத்தி, ராணுவ தளவாடங்களான ரேடர்கள், லேசர்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு அரிய தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன என்று கூறினார்.
கிரி பாபு பேசுகையில்: அரிய பூமி தனிமங்களின் மூலக்கூறுகளை மாற்றி அமைப்பதன் மூலம் அதன் தன்மைகள் எவ்வாறு மாறுபடுகின்றது என்று விளக்கினார். மின்சார வாகனங்களுக்கு தேவைப்படும் பேட்டரிகளை உருவாக்குவது முதல் விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் மூலப்பொருளிலும் அரிய பூமித் தனிமங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
கருத்தரங்கிற்கு சுமார் 130க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா, கல்லூரி முதல்வர் ஜெயா, டீன் மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
