இந்தியா முழுவதும் தபால் அலுவலகங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை (யுபிஐ) மூலம் பணம் செலுத்தும் வசதி செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான சோதனைகள் கர்நாடகாவின் மைசூர் மற்றும் பாகல்கோட்டை பகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது.
தற்போது மக்கள் கையில் பணம் வைத்திருப்பதை குறைத்து விட்டனர். பெட்டிக்கடை, டீக்கடை முதல் பெரிய பெரிய மால் வரை டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதற்கு வங்கி கணக்கில் பணம் இருந்தால் போதும். எங்கு சென்றாலும் வேண்டிய பொருட்களை வாங்கி, பணத்தை யுபிஐ முறையில் செலுத்தி விட முடியும்.
தபால் நிலையங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நவீன பணப்பரிமாற்ற வசதிகள் படிப்படியாக கொண்டு வரப்படுகின்றன. தபால் நிலையங்களில் ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கும் வசதி பொதுமக்களுக்கு பெரிதும் உதவுகிறது. இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் கவுன்டர்களில் பணமாகக் கொடுத்து தபால்நிலைய வங்கிக்கணக்கில் செலுத்தும் நடைமுறைதான் தற்போது உள்ளது.
முன்னதாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்த தபால் நிலையங்களில் QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. தொழில்நுட்ப சிக்கல்கள், வாடிக்கையாளர் புகார்கள் காரணமாக இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
