ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பை மேலும் ஊக்குவிப்பதோடு, ஏற்றுமதியை பெருக்குவதற்கான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் (சைமா) பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சைமா தலைவர் துரை பழனிச்சாமி கூறியதாவது: மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை ஜவுளித்துறையை சர்வதேச அளவில் ஊக்குவிப்பதற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. தேசிய ஃபைபர் திட்டத்தின் கீழ் இந்தியாவில் ஜவுளிக்கான மூலப்பொருட்கள் உருவாக்குவது ஊக்குவிக்கப்படும். இது ஜவுளித்துறை வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கும்.

சமர்த் திட்டத்தின் கீழ் ஜவுளி துறையில் திறன் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகமாகும். கேப்பிட்டல் சப்போர்ட் திட்டத்தின் கீழ் ஜவுளி துறையில் நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை நிறுவ உதவும்.

உள்நாட்டு கார்கோ போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் கோஸ்டல் கார்கோ திட்டம் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜவுளி வர்த்தகத்தை எளிதாக முன்னெடுத்திட ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை எளிமையாக்கும் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ஜவுளித்துறை கிளஸ்டர்கள் என அழைக்கப்படும் கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் பிரத்யேக திட்டங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டெய்னர் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரிக்கப்படும். மொத்தமாக ஜவுளி துறையினர் வரவேற்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது எனக் கூறினார்.