சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 -ன் மாவட்ட அளவிலான நான்காவது தொடர் அறிமுக விழா கருத்தரங்கம் கோவை பேரூரில் உள்ள தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்றது.
கோவை மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் (பொ) திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
பேரூராதீனத்தின் 25 ஆம் பட்டம் பெற்ற சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை தாங்கி பேசுகையில், நம் தமிழ் மொழியில் வளமான பல இலக்கியங்கள் இருப்பதை பலரும் அறியச் செய்ய இதுபோன்ற கருத்தரங்கம் உதவும். தமிழ் பயிலும் மாணவர்கள் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
நிகழ்வில் எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான இளங்கோவன் “காலத்தை வென்ற தமிழ்” என்ற தலைப்பில் பேசியதாவது: தமிழ் மொழி பானை ஓடு தொடங்கி, பனை ஓலை, பட்டுத்துணி, கல்வெட்டு, பட்டயம், காகிதம் என்று படிப்படியாக நடந்த மாற்றத்தை எதிர் கொண்டதை குறிப்பிட்டார்.
சங்க காலம் தொடங்கி, காப்பியங்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நவீன இலக்கிய வகையான சிறுகதை, நாவல், புதுக்கவிதை என இன்றும் காலத்தை வென்று நிற்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். மாணவர்கள் புத்தக வாசிப்பிலும், மொழி பெயர்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.
