மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல் பிப்ரவரி 2ம் தேதி இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

  • கோவில் மலைப் பாதையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • லாலி சாலை ரவுண்டானாவில் இருந்து தமிழ்நாடு வேளாண் கல்லூரி, பி.என்.புதூா் முல்லைநகா் சோதனைச் சாவடி வழியாக மருதமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வடவள்ளி- தொண்டாமுத்தூா் சாலை சந்திப்பில் இடது புறம் திருப்பி மகாராணி அவென்யூ, சின்மயா வித்யாலயா, அருண்நகா் வழியாக அஞ்சலூா் சந்திப்பில் வலது புறம் திரும்பி பொம்மன்னன்பாளையம் சாலை, கல்வீரம்பாளையம் வழியாக மருதமலையை அடைய வேண்டும்
  • பேருந்துகள், பாரதியாா் பல்கலைக்கழக இரண்டாவது நுழைவாயில் வழியாக தொலைமுறை கல்விக்கூட வளாகம் வந்து பயணிகளை ஏற்றவும், இறக்கிவிடவும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து இலகு ரக வாகனங்களும் மருதமலை அடிவாரம் தைலக்காடு வரை மட்டுமே சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள பாா்க்கிங்கில் நிறுத்த வேண்டும்.
  • தடாகம் சாலை இடையா்பாளையம் சந்திப்பில் இருந்து வடவள்ளி ரவுண்டானா வழியாக மருதமலைக்குச் செல்லும் வாகனங்கள் வடவள்ளி தொண்டாமுத்தூா் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கல்வீரம்பாளையம் சந்திப்பு வழியாக மருதமலைக்குச் செல்ல வேண்டும்.
  • தடாகம் சாலையில் இருந்து கணுவாய், ஆசிரியா் காலனி, காளப்பநாயக்கன்பாளையம் வழியாக நவாவூா் பிரிவு வரும் அனைத்து வாகனங்களும் இடையாா்பாளையம் சாலை வழியாக வடவள்ளி ரவுண்டானா வந்து தொண்டாமுத்தூா் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கல்வீரம்பாளையம் சந்திப்பு வழியாக மருதமலைக்குச் செல்ல வேண்டும்.
  • தொண்டாமுத்தூரில் இருந்து சிறுவாணி சாலை வழியாக கோவை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் அஞ்சனூா் சந்திப்பு, பொம்மன்னம்பாளையம் சந்திப்பில் வலது புறம் திரும்பி வேடப்பட்டி, பூசாரிபாளையம் சாலை வழியாக தடாகம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
  • மருதமலை அடிவாரத்தில் இருந்து நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் கல்வீரம்பாளையம் சந்திப்பு, நவாவூா் பிரிவு வழியாக வடவள்ளி ரவுண்டானாவை அடைந்து, வழக்கமான பாதைகள் வழியாக செல்லலாம்.
  • தடாகம் சாலை, லாலி சாலை சந்திப்பு வழியாகவும், இடையா்பாளையம் சாலை, வடவள்ளி ரவுண்டானா வழியாகவும், தொண்டாமுத்தூா் சாலை வழியாகவும் இலகுரக மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் பிப்ரவரி 2ம் தேதி இரவு 10 மணி வரை மருதமலை வடவள்ளி சாலையில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.