ஏப்ரல் 9ம் தேதி அசாமிலும், 23ம் தேதி மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், கோவையில் பணிபுரியும் அம்மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி செல்ல துவங்கி உள்ளனர்.

இதனால் கோவையில் இம்மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்த தேயிலை தோட்டம் மற்றும் பாக்கு சாகுபடி செய்தல் பணிகளில் பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டங்களில் அசாம் மாநிலத்தவர்கள் பலரும் பணிபுரிகின்றனர். அதே போல தொண்டாமுத்தூர் பகுதியில் பாக்கு சாகுபடி செய்யும் பணியிலும் அதிக அளவில் அவர்கள் பணிசெய்கின்றனர். மேலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பலரும் கோவையில் தங்க நகை தயாரிப்பு பணிகளில் பணிசெய்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் தேர்தல் வருவதால் அந்த காலத்தில் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்கு செலுத்திவிட்டு, குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்கலாம் என முன்னதாகவே திட்டமிட்டுள்ளனர். எப்படியும் பலரும் 1 மாதம் விடுமுறை எடுக்கதிட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.