இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், இன்ஸ்டன்ட் உணவுகள் அதிக பிரபலமடைந்துள்ளன. அதில் முதன்மையானது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். இரண்டு நிமிடங்களில் சமைக்கப்படும் இந்த உணவு, கல்லூரி மாணவர்கள் முதல் அலுவலக பணியாளர்கள் வரை பலரின் மதிய உணவாகவும், சில சமயங்களில் இரவு உணவாகவும் மாறிவிட்டது. ஆனால், இதனால் நம் உடலுக்கு எவ்வளவு ஆபத்து உள்ளது தெரியுமா?

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை அல்லது மைதாவால் தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து குறைவாகவும், தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் இல்லை. எனவே, இதனை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நன்மை தராது.

இந்த நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்படும் மசாலா பொடிகளில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது ஒருநாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட அளவின், பாதியை விட அதிகம். சோடியம் அதிகம் எடுத்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற தீவிர பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சுவையை அதிகரிக்கவும், நூடுல்ஸை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் வைத்திருக்கவும், பல பிராண்டுகள் மோனோசோடியம் குளூட்டாமேட் மற்றும் பிற பிரிசர்வேட்டிவ்களை சேர்க்கின்றன. குறைந்த அளவில் சேர்க்கப்படும் இந்த எம்.எஸ்.ஜி பெரும்பாலானோருக்கு பாதுகாப்பானதாக இருந்தாலும், அளவுக்கு மீறி சாப்பிடுவதால் வயிற்று உப்புசம், தலைவலி போன்ற பிரச்சினைகள் தோன்றலாம்.

இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பெரும்பாலும் பாமாயிலில் பொரிக்கப்பட்டவை. இதனால் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் சேர்ந்து, உடல் எடை அதிகரிப்பதற்கும், கொலஸ்ட்ரால் அளவுகள் உயரும் அபாயத்திற்கும் வழிவகுக்கிறது.

ஆரோக்கியமாக சாப்பிட சில வழிகள்

நூடுல்ஸ் விருப்பம் இருந்தாலும், ஆரோக்கியமாக சாப்பிட பின்பற்ற வேண்டிய குறிப்புகள்: கீரை, கேரட், குடைமிளகாய் போன்றவற்றை நூடுல்ஸ் சமைக்கும் போது சேர்க்கலாம். பாக்கெட்டில் வரும் மசாலா பொடிக்கு பதிலாக, நீங்களே மசாலா தூள் அல்லது மிளகு, இஞ்சி, பூண்டு போன்ற இயற்கை சுவைப்பொருட்களைப் பயன்படுத்தவும். பேக் செய்யப்பட்ட அல்லது காற்றில் உலர வைக்கப்பட்ட நூடுல்ஸைப் பயன்படுத்தவும். முட்டை, கிரில்டு சிக்கன் போன்ற புரதங்களைச் சேர்த்தால் இன்ஸ்டன்ட் நூடுல்சை ஓரளவு  ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்.