உலகளாவிய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியானது சமத்துவமின்மையை அதிகரித்தும், நாடுகளுக்கு இடையேயான டிஜிட்டல் மற்றும் பொருளாதார இடைவெளிகளை விரிவாக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
கணினி அறிவியல் யுகத்தில் புதிய பாய்ச்சலாக ஏ.ஐ உருவெடுத்துள்ளது. இதனால் தற்போதைய யுகத்தை ஏஐ யுகம் என்று சொல்லும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகளாவிய முன்னேற்றத்திற்கும், மனித வாழ்க்கை மேம்பாட்டிற்கும் புதிய வாய்ப்புகளை திறந்து வைக்கிறது.
கிராமப்புறங்களில் இருந்து மருத்துவத் துறை வரை, வேளாண் ஆலோசனை, துரித மருத்துவ பரிசோதனை, துல்லியமான காலநிலை கணிப்புகள், பேரிடர் முன்னெச்சரிக்கை போன்ற பல துறைகளில் ஏஐ ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும் ஆற்றல் மிக்கதாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், தரவு பாகுபாடு, டீப் ஃபேக் அச்சுறுத்தல்கள், சைபர் க்ரைம் தாக்குதல்கள், அதீத மின்சார நுகர்வு, வேலைவாய்ப்பு இழப்புகள் மற்றும் சமூகங்களுக்கு இடையேயான டிஜிட்டல் இடைவெளியை விரிவுபடுத்துதல் போன்ற சவால்களும் ஏஐ.,யால் பெருகி வருகின்றன.
இதற்கு நடுவே, ஏஐயை யார், எப்படி, எந்த அளவில் பயன்படுத்துகின்றனர் என்ற கேள்வி உலக நாடுகளுக்கு முக்கியமான கொள்கை சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா அமைப்பு செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து ஆய்வு ஒன்றை செய்தது. அதில் ஏஐயின் வளர்ச்சியால் உலக நாடுகள் இடையே ஏழை பணக்காரர் பாகுபாடு மேலும் உயரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகத்தில் ஏஐ வேகமாக வளர்கிறது. ஆனால், அதன் பலன் அனைவருக்கும் சமமாக கிடைக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது. பணக்கார நாடுகளும், மேல்தட்டு மக்களும் ஏஐயால் அதிக பயனடைவார்கள். ஆனால் ஏழை நாடுகள், மின்சாரம், இணையம் இல்லாத பகுதிகள், போர் பாதித்த மக்கள் போன்றோர் ஏஐ வளர்ச்சியில் பின்தங்கி விடும் அபாயம் உள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இந்த நிலை முந்தைய தொழில் புரட்சி காலத்தில் ஏற்பட்ட பாகுப்பாட்டை போன்றது எனவும் ஐ.நா ஒப்பிடுகிறது. தொழில் புரட்சியின் போது மேற்கத்திய நாடுகள் வேகமாக வளர்ந்த நிலையில், மற்றவை பின் தங்கின. ஏஐ காலமும் அதே பாதையை பின்பற்றக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் ஏஐ மூலம் வளர்ச்சிக்கான நிலையிலும், ஆப்கானிஸ்தான், மாலதீவு போன்ற நாடுகள் பின்தங்க நேரிடும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஆசியாவில் 25% மக்களுக்கு இன்னும் இணைய வசதியே கிடைக்கவில்லை என்ற தகவலையும் ஐ.நா வெளியிட்டுள்ளது. சில நாடுகள் மட்டுமல்லாமல் ஏஐயை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை உலக நாடுகள் உறுதி செய்யவேண்டும். இல்லையெனில் உலகில் பாகுபாடுகள் மேலும் அதிகரித்து ஏழை, பணக்காரர் இடையேயான இடைவெளி பெருகிவிடும் என்று ஐ.நா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
