கவர்ச்சியான நிறம் கொண்ட பாக்கெட்டுகளில் விற்கப்படும் பிஸ்கட்டுகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நொறுக்குத் தீனியாக உள்ளன. ஆனால், அந்த சுவையான பிஸ்கட்டுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பொருட்கள் ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் எதிரியாகும்.
விளம்பரங்களில் காட்டுவது போல, கிரீம் பிஸ்கட்டுகளில், பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் அல்லது பாலாடை இல்லை. பெரும்பாலும் அவை மலிவான தாவர எண்ணெய் (வனஸ்பதி), அதிக அளவு சர்க்கரை, செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படும் ரசாயன கலவைகளே. இவற்றை அடிக்கடி சாப்பிடுவது, உடலுக்குத் தேவையில்லாத கெட்ட கொழுப்பை சேர்த்துக்கொள்வதற்கு சமம்.
பெரும்பாலான பிஸ்கட்டுகள் மைதா மாவால் தயாரிக்கப்படுகின்றன. மைதா செரிமானத்திற்கு சிரமமானது; குடலில் ஒட்டிக்கொண்டு செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அதோடு, இதில் இருக்கும் டிரான்ஸ் ஃபேட் போன்ற ஆபத்தான கொழுப்புகள் குழந்தைகளின் ரத்தக் குழாய்களில் தேங்கி, இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான அபாயத்தை உருவாக்கலாம். இன்று பல பள்ளி வயது குழந்தைகளுக்கு தொப்பை உருவாவதற்கும் இந்த வகை கிரீம் பிஸ்கட்டுகள் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன.
சுவையை அதிகரிக்கச் சேர்க்கப்படும் சர்க்கரை, குழந்தைகளின் மூளையை அடிமையாக்கும் தன்மை கொண்டது. ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை உருவாக்கும். இதன் விளைவாக, பழங்கள், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை குழந்தைகள் மெதுவாக தவிர்க்கத் தொடங்குவார்கள்.
பிஸ்கட்டுகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கச் சேர்க்கப்படும் சில ரசாயனங்கள், குழந்தைகளின் கவனம் சிதறுவதற்கும், தேவையற்ற கோபம் மற்றும் நடத்தை மாற்றங்களுக்கும் காரணமாகலாம் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளுக்கும் இவை ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம்.
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகள் இதே போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், பெற்றோர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம். எந்த பிஸ்கட் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவையும் வாங்கும் முன், அதன் பாக்கெட்டின் பின்னால் உள்ள பட்டியலை படியுங்கள். மைதா, சர்க்கரை, வனஸ்பதி மற்றும் செயற்கை சேர்க்கைகள் எந்த அளவில் உள்ளன என்பதை சரிபார்த்த பிறகே வாங்குவது நல்லது.
முடிந்தவரை, குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், எள்ளு உருண்டை போன்ற பாரம்பரிய இனிப்புகள் அல்லது வீட்டில் செய்த பலகாரங்களை வழங்குங்கள். ராகி, கம்பு போன்ற சிறுதானியங்களில் செய்யப்பட்ட குக்கீஸ்களை வீட்டிலேயே தயாரித்து தரலாம்.
