கோவையில் சமீபத்தில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமி வெண்பாவின் உடல் உறுப்புகளை, சிறுமியின் பெற்றோர் – 73வது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்தோஷ் –  சுகன்யா தானமாக வழங்கினர்.

இந்நிலையில் இன்று கோவை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, பெற்றோரிடம் தனது இரங்கலை தெரிவித்தார்.

வெண்பா கடந்த திங்கள் அன்று ரத்த அழுத்தம் அதிகமாகி  மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவிழந்தாள். அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் புதன் அன்று சிறுமிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள்  அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

VENBA 2

இன்று, முதலமைச்சர் ஸ்டாலின் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்தபோது, உறுப்பு தானம் வழங்கியதற்காக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன்,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.