தமிழ்நாடு – தைவான் தொழில்நுட்ப நெய்தல் கூட்டாண்மை உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, தைவான் நெய்யப்படாத துணி தொழிற்துறை சங்கத்தின் பிரதிநிதிகள் இந்தியா வருகை தந்தனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு மாநில நெய்தல் குழு, தைவான் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாட்டின் முன்னணி தொழில்துறை நிறுவனங்களுக்கிடையே, கோவையில் பிரத்யேக பி2பி சந்திப்புகளை ஏற்பாடு செய்தது.
இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு ஜவுளி குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோபிகுமார் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வேல் கிருஷ்ணா ஆகியோர் பேசுகையில், தமிழ்நாடு ஏற்கனவே ஆட்டோமொபைல் மற்றும் தோல் துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இந்தியாவின் மொத்த காலணி உற்பத்தியின் 35 முதல் 40% மற்றும் ஏற்றுமதியின் சுமார் 45% தமிழ்நாட்டிலிருந்து நடைபெறுகிறது. தற்போதைய தோல் மற்றும் தோல் அல்லாத காலணிகளின் விகிதம் 90:10 ஆக இருந்தாலும், உலகளாவிய சந்தை தேவைகள் தோல் அல்லாத காலணிகளுக்குத் திரும்பி வருவதால், இந்த துறையில் மாநிலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தனர்.
தைவான் பிரதிநிதிகளின் முக்கிய நோக்கம், ஆட்டோமொபைல் மற்றும் தோல் அல்லாத காலணி துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதுடன், நார் முதல் நெய்யப்படாத துணி பொருட்கள் மற்றும் இறுதி தயாரிப்புகள் வரை முழுமையான மதிப்புச்சங்கிலி அமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கான சாத்தியங்களை மதிப்பீடு செய்வதாகும்.
நெய்யப்படாத துணி மற்றும் தொழில்நுட்ப நெய்தல் துறைகளில் முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த பிரதிநிதிகள் குழு, தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகள் மூலம் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் அதிக ஆர்வம் வெளிப்படுத்தியது.
