சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்வி அஞ்சாரியா ஆகியோர் அமர்வு வழக்கை விசாரித்து கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், விளையாட்டு வளாகங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும். இதற்காக வேலி அமைக்க வேண்டும்.
இந்த பகுதிகளில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் வைத்து தடுப்பூசி செலுத்தி கருத்தடை செய்ய வேண்டும். பிறகு அந்த தெருநாய்களை வேறு இடத்தில் விட வேண்டும்.
பொதுஇடங்களில் தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேலி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மேற்பார்வை செய்து உறுதி செய்யவேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளும், 8 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை 2026 ஜனவரி 13ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
