தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் இணைந்து 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.
இதில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு ஒரு அணி என 38 அணிகளும், கோவை, தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களுக்கு இரண்டு அணி என மொத்தம் 41 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகள் முதல் மூன்று நாட்களுக்கு லீக் போட்டியாகவும் கடைசி இரண்டு நாட்கள் நாக் அவுட் போட்டியாகவும் நடைபெற்றது.
இப்போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கூடைப்பந்து கழக விளையாட்டு அரங்கம் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கூடைப்பந்து அரங்கிலும் நடைபெற்றது.
இறதிப் போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அணியும் தூத்துக்குடி மாவட்ட அணியும் மோதின. இதில் திருவள்ளூர் மாவட்ட அணி 96 – 76 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது.
மூன்று மற்றும் நான்காவது இடங்களுக்கான போட்டியில் கோவை மாவட்ட எ அணியும் தேனி மாவட்ட அணியும் மோதின. இதில் கோவை மாவட்ட எ அணி 82 – 73 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை கைப்பற்றியது.
பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும், கோவை சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனருமான செல்வராஜ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.