ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 35வது விளையாட்டு விழா நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட காவல்துறை துணை ஆணையர் திவ்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் திவ்யா பேசும்போது, பெண்கள் உடல் நலமும் மனநலமும் உடையவர்களாக இருந்தால்தான் எதிர்காலத்தைத் துணிவோடும் தெளிவோடும் எதிர்கொள்ள முடியும். அதனால் கல்லூரி மாணவிகள் கல்வியோடு உடல் நலத்தைப் பாதுகாப்பதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். குறிக்கோளை நிர்ணயித்தல், திட்டமிடல், மன ஒருமைப்பாட்டோடு தொடர்ந்து முயற்சி செய்தல், சீராக வாழ்வை வாழ்தல் போன்ற வாழ்வியல் திறமைகளை விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்றார்.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்களின் கராத்தே, சிலம்பம், ஏரோபிக்ஸ் மற்றும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று கல்லூரியின் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கணினி அறிவியல் துறை தட்டிச் சென்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

