16 வயதுக்கு உட்பட்ட பிரிவிற்கான தென் மண்டல இடைக்கழக கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளையின் சார்பில் ஏ மற்றும் பி என இரண்டு அணிகள் பங்கேற்றன.

ஆரம்ப சுற்றுகளிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணிகளும், பிற அகாடமி அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஒரே அறக்கட்டளையைச் சேர்ந்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.

முதலில் களமிறங்கிய ஏ அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய பி அணி 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஏ அணி வெற்றி பெற்று, தென் மண்டல இடைக்கழக கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

வெற்றி பெற்ற அணியினருக்கும், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி அணி வீரர்களுக்கும், அறக்கட்டளை நிர்வாகம், பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.