ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், முன்னாள் மாணவர் சங்கத்தின் துபாய் கிளை கடந்த 2023ம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வருகிறது.
துபாய் கிளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, துபாய் நாட்டில் டெய்ரா நகரில் உள்ள கிரௌன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர் சங்க துபாய் கிளைத் தலைவர் அனீஷ் கோபாலன், வரவேற்றுப் பேசினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைமைக் கிளைத் தலைவர் செந்தில்குமார் சங்கத்தின் செயல்பாடுகள், முன்னெடுப்புகள், எதிர்காலத் திட்டங்கள் விளக்கினார்.
விழாவில், கல்லூரியின் தகவல் ஏடு வெளியிடப்பட்டது. முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி அனுபவங்களையும், பசுமையான கல்லூரியின் நினைவுகளையும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
அப்போது அவர்கள், தற்போது பயின்று வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
முன்னாள் மாணவரும், துபாயில் பணியாற்றி வரும் சமையல் கலை நிபுணருமான ஆனந்த் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கச் செயலர் சந்தானகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பிரகதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
