ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 39வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மதுக்கரை 195 ஃபீல்ட் ரெஜிமென்ட் மேஜர் ராஜேஷ், சிறப்பு அழைப்பாளராக இந்திய ரயில்வே தேசிய தடகள பயிற்சியாளர் மற்றும் முன்னாள் ஆசிய பதக்க வெற்றியாளர் முகமத் நிஜாமுதின் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் மேஜர் ராஜேஷ் பேசியதாவது: விளையாட்டு என்பது உடற்தகுதியை தருவது மட்டுமல்ல. எந்தவகை விளையாட்டு வீரராக இருந்தாலும் விளையாட்டின் மூலமாக பல்வேறு தகுதிகளைப் பெற்றுக் கொள்கின்றனர். கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, குழுவாக இணைந்து ஆலோசித்தல், விட்டுக் கொடுத்தல், அர்ப்பணிப்பு போன்ற எண்ணற்ற தகுதிகள் விளையாட்டின் மூலம் ஒருவருக்குக் கிடைக்கிறது.

இந்த கல்லூரி விளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கி வருகிறது. அவர்கள் வளர்வதற்கான பண உதவியையும் வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய இளைஞர்கள் படிப்போடு சேர்ந்து விளையாட்டிலும் சாதிக்க வேண்டும் எனப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளர் முகமத் நிஜாமுதின் பேசும்போது, விளையாட்டுத் துறையில் பயணிப்பவர்கள் பல்வேறு தகுதிகளோடு சிறந்த ஆளுமைகளாகத் திகழ்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் எல்லாத் துறைகளிலும் போட்டி மிக அதிகம். தற்போது தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
ஆசிய விளையாட்டுக்கள், காமன்வெல்த் விளையாட்டுக்களில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசும், குரூப் – 2 தகுதியில் வேலைவாய்ப்பும் வழங்கி வருகிறது. கல்லூரிகளில் படிக்கும்போதே உங்கள் தகுதியையும் திறமையையும் வளர்ந்து கொள்ளுங்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து, பேட்மிண்டன், சதுரங்கம், கபடி, கோ கோ, டேபிள் டென்னிஸ், கைப்பந்து, கிரிக்கெட், வீச்சு பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னர், அனைத்து நிலைகளிலும் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர் அணிகளுக்கு வெற்றிக்கோப்பையும் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. அதன்படி, மாணவர் அணியில் இளநிலை பிபிஏ துறை முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது. அதேபோல் மாணவியர் அணியில் முதுநிலை எம்.பி.ஏ மற்றும் எம்.எஸ்.டபிள்யூ துறை முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.

