ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிறுவனம் தனது 21வது கிளையை திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரில் திங்கட்கிழமை திறந்துள்ளது. குமரன் ஆயில் மில்லை சேர்ந்த பொன்னுசாமி புதிய கிளையைத் திறந்துவைத்தார்.
நிகழ்வில் அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ், தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் தாமோதரசாமி, எக்சிகியூடிவ் இயக்குநர் விவேக் சீனிவாசன், கார்த்தி ஆகியோர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
12,500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கிளையில், பிரத்யேக டைனிங் ஹால், ஒரு பார்ட்டி ஹால், இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவு மற்றும் விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

தரை தளத்தில் அமைந்துள்ள டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 150 பேர் அமர்ந்து உணவருந்த முடியும். இந்த கிளையின் முதல் விற்பனையை சண்முகம் தொடங்கிவைக்க, அதை அரவிந்த் பெற்றுக்கொண்டார்.
முதல் தளத்தில் உள்ள ஆதிரை என்ற பெயரிடப்பட்ட 6,500 சதுர அடி கொண்ட பார்ட்டி ஹாலை, காங்கேயத்தைச் சேர்ந்த டாக்டர். விஷ்ணு ஆனந்த் திறந்துவைத்தார். இதில் 500 பேர் வரை அமர்ந்து சுப நிகழ்வுகளில், பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். சமையலறையை யுனைடெட் கார்பன் நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயந்தன் திறந்துவைத்தார்.
1,500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள பிரத்யேக இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள், 25க்கும் அதிகமான கார வகைப் பலகாரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேக்கரி உணவு வகைகள் உள்ளன. இந்த வளாகத்தில் 100 கார்களை நிறுத்தும் வசதியுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
