இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சார்பில், உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு மாநாட்டில், மண் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தீர்மானம் 007 நிறைவேற்றப்பட்டுள்ளது.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் உலகளாவிய மாநாடு, அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் மண் பாதுகாப்புச் சட்டத்திற்கான தீர்மானத்தை, ‘ஔரோரா’ என்ற மண் பாதுகாப்பு சிந்தனைக் குழுவின் ஆலோசனைகளுடன் சத்குருவின் மண் காப்போம் இயக்கம் மற்றும் அமெரிக்காவின் பேஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள எலிசபெத் ஹாப் சட்டப் பள்ளியின் சர்வதேச சுற்றுச்சூழல் சட்ட ஆய்வு மையம் ஆகியன இணைந்து முன்னெடுத்தன. மண் காப்போம் இயக்கத்தின் தொடர் முயற்சிகளினால் தற்போது இந்த தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியுள்ளது.
இதன் மூலம் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் இதற்கான ஒரு பிரத்யேக பணிக்குழுவை உருவாக்கும். இந்த குழு மண் பாதுகாப்புக்கான சர்வதேச ஒப்பந்தம் அல்லது உலகளவில் பின்பற்றப்பட வேண்டிய சட்டவழிமுறைகளை உருவாக்கும். இது ‘மாதிரி மண் பாதுகாப்புச் சட்டத்தை’ உருவாக்க வழிவகுக்கும். மேலும் 90க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளை, அதன் தேசிய செயல்பாடுகளில் மண் பாதுகாப்பு சட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்து செயல்பட ஊக்குவிக்கப்படும்.
இது தொடர்பான சத்குருவின் எக்ஸ் தளப்பதிவில், அபுதாபியில் நடைபெற்ற உலக வளம் காத்தல் மாநாட்டில், மண் பாதுகாப்புச் சட்டம் குறித்த தீர்மானம் 007-ஐ நிறைவேற்றிய ஐ.சி.யு.என் உறுப்பினர் அமைப்புக்கும், முன்மொழிந்தவர்களுக்கும், மண் காப்போம் இயக்கத்துக்கும், உடன் ஆதரவளித்தவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மண்வளத்தை காக்க நிலையான ஈடுபாடும், ஒட்டுமொத்தமான அணுகுமுறையும் தேவை என்பதை உலகளவில் அங்கீகரிப்பது அவசியம். அந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படி இது. நிஜமான பணி இப்போதுதான் ஆரம்பிக்கிறது. மண்ணுக்காகவும், நமது விவசாயிகளுக்காகவும், அனைத்து உயிர்களுக்காகவும், நமது எதிர்காலத்திற்காகவும் ஒன்றிணைவோம், வாருங்கள் எனக் கூறியுள்ளார்.
