ஈரோட்டை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பிரபல எஸ்.கே.எம் குழுமங்களின் தலைவரும், வேதாத்திரி மகரிஷியால் நிறுவப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவருமான பத்மஸ்ரீ மயிலானந்தன் – குட்டி லட்சுமி தம்பதியரின் 80ஆம் ஆண்டு நிறைவு சதாபிஷேக விழா கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.
சதாபிஷேக விழா, இதனையொட்டி அவிநாசி தாமரை குளத்தில் 8000 பனை மரக்கன்றுகள் நடும் விழா, உலக சமுதாய சேவா சங்கத்திற்கு வளர்ச்சி நிதி வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் மற்றும் ஆழியாறு அறிவுத்திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவருமான பாலசுப்பிரமணியன் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கி, மயிலானந்தன் பற்றிய வாழ்க்கை வரலாற்று குறும்படத்தை வெளியிட்டார். விழாவில் மயிலானந்தன் பற்றிய ‘வாழ்வெனும் பேரின்பம்’, ‘ஆயிரம் பிறை கண்ட அருள்நிதி’ ஆகிய புத்தகங்களும், ராம்ராஜ் காட்டன் சார்பில் ‘வேதாத்திரியம் 80’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
மேலும், 8000 பனை நாற்றுகளை அவிநாசிலிங்கேஸ்வர் கோவிலுக்கு அருகில் உள்ள தாமரைக் குளக்கரையில் நடும் சேவையினை, பல்லடம் வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் ஸ்கை சுந்தர்ராஜ் நிறைவு செய்து அதனை மயிலானந்தனிடம் சமர்ப்பித்தார்.
முக்கிய அம்சமாக உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத் தலைவர்களும், ஆழியாறு அறிவுத்திருக்கோவில் அறங்காவலர்களும் இணைந்து, உலக சமுதாய சேவா சங்கத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.9 கோடி வழங்கினர். ராம்ராஜ் காட்டன் நிறுவனரும், தலைவருமான நாகராஜன் இதனை மயிலானந்தனிடம் வழங்கினார்.
வாழ்க்கை நெறியைக் கற்றுத்தரும் மனவளக்கலை
ஏற்புரையில் மயிலானந்தன் பேசியதாவது: இக்காலத்திற்குத் தேவையான ஆன்மீகப் பயிற்சியை வாழ்க்கைக் கல்வியாகப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அடிப்படைச் சான்றிதழ், பட்டயம், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டக் கல்வியாக மனவளக்கலை வழங்குகிறது. சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து மக்கள் மனம் பண்பட்டு ஆத்ம ஞானம் அடைவதற்கு உரிய பயிற்சிகளை மனவளக்கலை வழங்குகிறது.
பிறருக்குத் துன்பம் தராமலும் பிறரால் தனக்குத் துன்பம் உண்டாகாமலும் வாழக்கூடிய வாழ்க்கை நெறியை மனவளக்கலை பயிற்றுவிக்கிறது. உலக சமுதாய சேவா சங்கத்தின் கீழ் 220 அறிவுத் திருக்கோயில்கள், 400 அறக்கட்டளைகள், 2500 தவமையங்கள், 18500 பேராசிரியர்கள், 372 கிராமங்கள், 34 பல்கலைக்கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என பல்வேறு வழிகளில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பயிற்சிபெற்றுப் பயனடைந்து வருகின்றனர் எனப் பேசினார்.
