ரேஸ்கோர்ஸில் காற்றின் தரத்தை மேம்படுத்த, சிறுதுளி அமைப்பு கோவை மாநகராட்சியின் ஆதரவுடனும், ரேஸ்கோர்ஸ் மற்றும் சுற்றுப்புற சங்கத்துடன் (RANA) இணைந்து பூர்வீக வகை மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளது.

கோவையில் உள்ள ரேஸ்கோர்ஸ் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் குதிரை பந்தய வசதிக்காக நிறுவப்பட்டது. தற்போது ஒரு வரலாற்று சிறப்புமிக்க, நன்கு பராமரிக்கப்படும் நகர்ப்புற பூங்காவாகவும், நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாகவும் உள்ளது.

மேலும் நடைபயிற்சி மற்றும் ஜாகிங் செய்வதற்கு மிகவும் பிரபலமான இடம் ரேஸ்கோர்ஸ் உள்ளது. இங்கு மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்கிறார்கள். பசுமையான சூழலில் அமைந்துள்ளது.

இந்நிலையில் ரேஸ்கோர்ஸில் காற்றின் தரத்தை மேம்படுத்த, சிறுதுளி அமைப்பு அதிக பூர்வீக வகை மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளது.  மேலும், சாலையோர மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் இரு இடங்களில் அமைக்கப்படும். இது மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவும்.

ரேஸ்கோர்ஸ் மற்றும் சுற்றுப்புற சங்கம் இந்த முயற்சிகளுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளது. இதன் தலைவர் ஆதித்யா பாலசுந்தரம், செயலாளர் கமினி சுரேந்திரன் ஆகியோர் காசோலையை, சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனிடம் வழங்கினர்.