கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள ஸ்ரீமதி தனலட்சுமி ஆறுச்சாமி பல்நோக்கு கலையரங்கில் 16வது கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றது.
கல்லூரி செயலர் மற்றும் இயக்குனர்சி.ஏ.வாசுகி தலைமை தாங்கி பேசினார். கோயம்புத்தூர் மாவட்ட சிலம்பாட்ட சங்கத் தலைவர் முத்துராஜு, தமிழ்நாடு பளுதூக்குனர் சங்கத் துணைத் தலைவர் மற்றும் பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சிலம்ப கூடங்களில் இருந்து சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் சுமார் 350 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு சிலம்பம், சுருள், வால் உள்ளிட்டவைகளில் போட்டியிட்டனர்.
இறுதியில் 80 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான சிலம்ப போட்டிக்குத் தேர்வாகினர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்.பி. கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, கல்லூரி செயலர் வாசுகி ஆகியோர் சான்றிதழ்கள், கோப்பைகள், மெடல்களை வழங்கினர்.
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழர் தற்காப்புக் கலை மன்ற சிலம்ப அணி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. 2வது இடத்தை கோவை சிலம்பம் அகடாமியும், 3வது இடத்தை வீரவர்மன் சிலம்பாட்ட குழுவும், 4வது இடத்தை வெற்றி சிலம்பக்கூடம் அணியும் பெற்றன.

