ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய, ‘வாகைசூடவா’ என்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: ‘கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காலம், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகுவதற்கு ஏற்றதாகும். எதிர்காலத்திற்கான முன்னோட்டத்தை இப்போதே தொடங்கி, நீங்கள் யாராக வேண்டும் என்பதைத் தீர்மானித்தால், அதைநோக்கிய திட்டமிடலுக்கு உங்கள் மனம் தயாராகிவிடும். சிவில்சர்வீஸ் தேர்வுகளைப் பொறுத்தவரை, தொடர் கற்றல் மட்டுமே வெற்றியைப் பெற்றுத்தரும்.முதல்முறை அல்லது பலமுறை முயற்சி செய்து வெற்றி பெற்றவர்கள் உள்ளனர். தேர்ச்சி பெறபோதிய மதிப்பெண் பெறுவது, காலதாமத்தைக் குறைப்பதற்கு முறையான வழிகாட்டுதல்கள் அவசியம். மற்றவர்கள் அளிக்கும் ஊக்கத்தைவிட, சுயஊக்கமே சக்திவாய்ந்தது’என்றார்.

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குநர் பூமிநாதன், சிவில்சர்வீஸ் தேர்வு முறைகள் குறித்துப் பேசினார். முன்னதாக , ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் பெறுநிறுவனத் தொடர்பு மைய இயக்குநர் தாமரை செல்வன் வரவேற்றுப் பேசினார்.