Scorching Summer: 7 lakh people risk dying every year!
காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் அதீத வெப்பம், மனிதர்களின் அன்றாட உடல் உழைப்பை பாதித்து, உலகளவில் சுகாதாரப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
மருத்துவத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த லான்செட் இதழில் வெளியாகியுள்ள அந்த ஆய்வில், 2050ஆம் ஆண்டுக்குள் வெப்பநிலை உயர்வு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் பேர் அகால மரணமடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் உலக பொருளாதாரத்திலும் தீவிரமாகப் பிரதிபலிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி, அதிக வெப்பம் காரணமாக உலகளவில் சுமார் 368 கோடி டாலர் அளவிலான உற்பத்தி இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயரும்போது மக்கள் வெளியே சென்று நடப்பது, உடற்பயிற்சி செய்வது, அன்றாட உடல் இயக்கங்களில் ஈடுபடுவது போன்றவற்றைத் தவிர்க்கும் நிலை உருவாகிறது. இதன் விளைவாக, உலக சுகாதார அமைப்பு 2030ஆம் ஆண்டுக்குள் உடல் உழைப்பின்மையை 15 சதவீதம் குறைக்க நிர்ணயித்துள்ள இலக்கை அடைவது சிரமமாக மாறும் அபாயம் உள்ளது.
அதிகரிக்கும் வெப்பத்தின் காரணமாக மக்களின் உடல் இயக்கம் குறைவதால் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய நோய்கள் மேலும் பல தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும் காரணிகளாக மாறக்கூடும். அவற்றை முறையாகக் கண்காணிக்காதபட்சத்தில், உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமையலாம். இதனுடன், அதிக வெப்பத்தால் ஏற்படும் நீரிழப்பு காரணமாக உயிரிழப்பு அபாயமும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, 2050ஆம் ஆண்டில் போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தால், ஒரு லட்சம் மக்கள்தொகையில் சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக்கூடிய நிலை உருவாகலாம் என ஆய்வு எச்சரிக்கிறது.
குறிப்பாக வெப்பமண்டல நாடுகளில், சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸைத் தாண்டும் போது, ஒவ்வொரு மாதமும் உடல் உழைப்பின்மை 1.85 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனைத் தடுக்க, உடற்பயிற்சி வழிகாட்டுதல்களில் வெப்ப அபாய எச்சரிக்கைகளை இணைத்தல், நிழல் நிறைந்த நடைபாதைகள் அமைத்தல், வெப்பப் பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
