சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவி லக்ஷ்னா ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில் கோயம்புத்தூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதுடன், சென்னையில் நடைபெறவிருக்கின்ற மாநில அளவிலான இறுதிச்சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி கோயம்புத்தூர் சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான இடைநிலைப் பிரிவில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 60 மாணவ மாணவியரும் மேல்நிலைப் பிரிவில் 45 மாணவ மாணவியரும் பங்கேற்றனர். மேல்நிலைப் பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவி லக்ஷ்னா முதலிடம் பெற்றார்.
இடைநிலைப் பிரிவில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் அகில் இரண்டாம் இடம் பெற்றார். அவர் சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதே பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவர் தீபக் சூர்யா ஊக்கப்பரிசு பெற்றார். வெற்றிபெற்ற மாணவ மாணவியரைக் கோயம்புத்தூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை உதவி ஆணையர் ராஜு சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினார்.
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி ஆறாவது முறையாக மாநில அளவிலான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அத்துடன், பள்ளி மாணவ மாணவியர் ஐந்து முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இறுதிச்சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவியை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன், கல்வி ஆலோசகர் முனைவர் கணேசன், பள்ளி முதல்வர் முனைவர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் முனைவர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.