பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 14ம் தேதி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.
கிழக்கு மண்டலத்தில் வரதராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம், மேற்கு மண்டலத்தில் ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானம், வடக்கு மண்டலத்தில் காந்தி மாநகர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், தெற்கு மண்டலத்தில் கோவைப்புதுார் ஏ கிரவுண்டு, மத்திய மண்டலத்தில் வ.உ.சி. மைதானத்தில் சமத்துவ பொங்கல் நடைபெற உள்ளது.
மேலும், 100-க்கும் மேற்பட்ட பானைகள் கொண்டு பொங்கல் இடுதல், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கோலப்போட்டி, உறி அடித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், குடியிருப்பு நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
