கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், முருகன் மில்ஸ்/கங்கா மருத்துவமனை அருகே துவங்கி 1.2 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மாநில நெடுஞ்சாலை துறையின் என்.ஹெச். பிரிவு சார்பில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலம் ஆகஸ்ட் 2026ல் கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மேம்பால திட்டம் அமைந்து வரும் சாய்பாபா காலனி பகுதி அருகே உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
இதை நிறுவ 10 – 15 நாட்கள் ஆகும் எனவும், இதற்கு அடுத்து அப்பகுதியில் மின் கம்பிகளை மாற்றியமைக்க 45 நாட்கள் ஆகும் என தகவல் வெளிவந்துள்ளது. மேம்பாலத்தின் மேலே 11 மீட்டர் உயரத்தில் மின் வயர்கள் செல்ல வழிசெய்யப்படும். இதனால் அனைத்து வகை வாகனங்களும் எந்த சிரமமும் இன்றி மேம்பாலம் திறக்கப்படும் போது பயணிக்கமுடியும்.
இந்த மேம்பாலத் திட்டத்தின் முக்கிய கட்டுமான பணிகளில் 2 இடங்களில் டெக் ஸ்லாப் பொருத்தவேண்டும், 1 இடத்தில் (எரு கம்பெனி அருகே) ஏறு-இறங்கு தளம் ஒன்றை அமைக்கவேண்டும். இப்பணி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த மேம்பால கட்டுமானத்தை ஆகஸ்ட் மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே பணிகளை முடிக்க நெடுஞ்சாலை துறை முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
