ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் மற்றும் தேசிய அஞ்சல் வாரம் முன்னிட்டு சச்சிதானந்த பள்ளி மாணவ மாணவியர் அஞ்சல் அட்டையில் “எனது கனவு” என்ற தலைப்பில் கடிதம் எழுதும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கடிதம் எழுதத் திரண்டிருந்த 850 மாணவ மாணவியரிடையே பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமையுரையாற்றினார்.
அவர் தனது உரையில், “நமது கருத்துகளை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த கருவியாக விளங்குவன கடிதங்கள். கடிதங்கள் பலரது வாழ்க்கையையே மாற்றியமைத்திருக்கின்றன. அப்துல் கலாம் அவர்கள், நமது நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக விளங்க வேண்டும் என்று விரும்பினார். “தூங்கும் பொழுது வருவது கனவல்ல, நம்மைத் தூங்க விடாமல் செய்வதுதான் கனவு’ என்று அப்துல் கலாம் கூறியதனை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். கலாம் உருவாக்கிய அக்னி, ஆகாஷ், பிருத்வி, திரிசூல் ஆகிய ஏவுகணைகளின் பெயர்களையே நம் பள்ளியிலுள்ள அணிகளுக்கு வைத்திருப்பதில் பெருமை கொள்ள வேண்டும். தொடர்ந்து கடிதங்களை எழுதுங்கள். கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை. கடிதங்கள் எழுதுகின்ற பழக்கம், உங்களை வாழ்க்கையில் மிகச்சிறந்த நிலைக்குக் கொண்டு செல்லும். அஞ்சல் அலுவலகங்கள் நம் எண்ணங்களைக் கடிதங்கள் வாயிலாக மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்கின்ற அற்புதப் பணியைச் செய்து வருகின்றன. அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் என்று பேசினார்.
விழாவில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் அலுவலக தலைமை அஞ்சல் அதிகாரி நாகஜோதி, துணை முதல்வர் சக்திவேலு, ஆசிரியர்கள், மாணவ மாணவியர் மற்றும் அஞ்சல் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.