கோவையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டிற்கு சுமார் 2 லட்சம் வீடுகளுக்கு 24 மணி நேர திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் பழைய மாநகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய 58 வார்டு பகுதிகளில் 1,50,000 வீட்டு இணைப்புகளுக்கு 24 மணி நேர குடிநீர் விநியோகம் வழங்க ரூ.646.71 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் முடிவுபெறும் நிலையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தற்போது 1,15,000 வீட்டு இணைப்புகளுக்கு 24 மணி நேர குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக உருவான மனைப்பிரிவுகளுக்கும், விடுபட்ட பகுதிகளிலும் உள்ள சுமார் இரண்டு லட்சம் குடியிருப்புகளுக்கு 24 மணி நேர குடிநீர் விநியோகம் வழங்க மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
குடிநீர் குழாய்கள் சுமார் 900 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றியமைப்பது, தேவையான எண்ணிக்கையில் மேல்நிலைத் தொட்டிகள் அமைப்பது குறித்த விரிவான திட்ட அறிக்கை ரூ.1,200 கோடி மதிப்பீட்டிற்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகள் அரசிடம் நிதி பெற்று, வரும் நிதியாண்டில் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
