கோவை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுகாதாரத் துறை மூலமாக செயல்படுத்தப்படும் புற்றுநோய் பரிசோதனை திட்டத்துக்கு ரூட்ஸ் நிறுவனம் சி.எஸ்.ஆர் நிதியின் மூலமாக புற்றுநோய் பரிசோதனைக்கான வாகனத்தை வழங்கியுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் மருத்துவர் சுமதி, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பாலுசாமி, ரூட்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநர் கவிதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய்களை ஆரம்பநிலையில் கண்டறியும் திட்டத்தின்கீழ் சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலைய அளவில் பரிசோதிக்கப்பட்ட பயனாளிகளில் நோய்க்கான அறிகுறிகள் தென்படும் மருத்துவப் பயனாளிகளை உயர் சிகிச்சைக்காக ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாள்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லும் பணிக்காக இந்த வாகனம் பயன்படுத்தப்படும்.
மேலும் வாகனத்தின் எரிபொருள், பராமரிப்பு, ஓட்டுநர் சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் ரூட்ஸ் குரூப் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
