கோயமுத்தூர் எம்.எஸ்.எம்.இ. அசோசியேசன் சார்பாக ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா கூட்ட அரங்கில், “இன்றைய தொழில் நிலைமை மற்றும் தொழில்கள் எதிர்கொள்ளும் சாவல்கள்” குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கோயமுத்தூர் எம்.எஸ்.எம்.இ. அசோசியேசனின் தலைவர் டி.மணி தலைமை ஏற்றார். செயலாளர் பாண்டியன் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.

இன்றைய காலகட்டத்தில் சிறு குறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கோயமுத்தூர் கம்ப்ரஸர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவர் ரவீந்திரன் சிறப்புரை வழங்கினார்.

MSME 3

காப்பர், ஸ்டீல், அலுமினியம் போன்ற மூலப்பொருட்களின் விலை நிலையில்லாத தன்மையில் இருப்பதால் தொழில்துறை, குறிப்பாக சிறு குறு தொழில்கள் சந்திக்கும் சவால்கள், பற்றி அவர் பேசினார்.

மூலப் பொருட்களின் விலை என்பதை நிர்ணயம் செய்வது மிகப்பெரும் பலம் கொண்ட சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் என்று கூறிய அவர் இவற்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார்.

இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை நமது நாட்டில் இருக்கக்கூடிய உலோக விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் மேலும் முயற்சி எடுக்கலாம் என அவர் கூறினார்.

கச்சா எண்ணெய் விலை எடுத்துக் கொண்டால், சர்வதேச விலை எதுவாக இருந்தாலும், அரசாங்கங்கள் கட்டுப்படுத்தி பலகாலமாக ஒரே விலைக்கு தானே பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல உரம் மானியத்திலும் அரசு தலையிட்டு விலையை கட்டுப்படுத்துகிறது. உரம் விலை என்ன தான் இருந்தாலும் விவசாயிகளுக்கு சலுகை விலையில் மானியம் கொடுக்கப்படுகிறது.

MSME

உரம் விலையும், பெட்ரோல்  விலையையும்  கட்டுப்படுத்துவது போல, தொழில்துறைக்கு தேவையான மூலப் பொருட்கள் விலையையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முக்கியமாக, அரசாங்கம் தலையிட்டு ஒரு விலை நிர்ணய கமிட்டியை அமைக்க வேண்டும். அந்த கமிட்டியில் கண்டிப்பாக சிறு குறு  நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், இந்த கமிட்டியின் மூலம் உலோகப் பொருட்களான – காப்பர், அலுமினியம், ஸ்டீல் ஆகியவற்றுக்கு அதிகபட்ச விற்பனை விலை என்பதை நிர்ணயம்  செய்து, ஆண்டுக்கு ஒரு முறை அதை மாற்றிக்  கொள்ளட்டும். அடிக்கடி ஏற்றம் இறக்கம் என்பது இல்லாமல் ஆண்டிற்கு ஒரு முறை ஒரு நிலையான விலையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி அரசாங்கத்திடம் தொழில்துறை அமைப்புகள் போராட வேண்டும் என்று ரவீந்திரன் கூறினார்.

அதற்கடுத்து, இந்த சங்க நிர்வாகியான தனபால் முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

மத்திய அரசு மூலப் பொருட்களின் விலையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கட்டுப்பாடு சாதாரண சிறு குறு தொழில் முனைவோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள்களின் விலையை அரசு தனது கட்டுப்பாட்டில் மாத கணக்கில் கட்டுப்படுத்தி வைத்துள்ளது.

இந்த எரிபொருட்களின் உற்பத்தி 50%க்கும் மேற்பட்டு தனியார் கையில் தான் உள்ளது. ஆனாலும் அதன் விலை அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அதுபோலவே தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மிக முக்கியமான மூலப்பொருட்களை அரசு தனது குறைந்தபட்ச இருப்பில் வைத்துக்கொண்டு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், சீரான விலையில் மூலப்பொருட்களை சந்தையில் கொடுக்கவும் வேண்டும் என இந்த கருத்தரங்கம் வாயிலாக கோயம்முத்தூர் எம்.எஸ். எம். இ. அசோசியேசன் மூலம் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதை அடுத்து அது நிறைவேற்றப்பட்டது.இதைத்தொடர்ந்து மேலும் சில முக்கிய தலைப்புகளில் சிறப்பு பேச்சாளர்கள் பேசினர்.