இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ், டிக்டாக் போன்ற குறுகிய நேர வீடியோக்கள் இன்று பலரின் தினசரி பழக்கமாகிவிட்டன. சில நிமிட பொழுதுபோக்காக தொடங்கியதை, பல மணிநேரம் ஸ்க்ரோல் செய்கின்றனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், தொடர்ச்சியாக குறுகிய நேர வீடியோக்களை பார்ப்பது, மதுபழக்கம் அல்லது புகைப்பழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகமான நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்த நேர அளவைக் கொண்ட வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்களுக்கு பதற்றம், மன அழுத்தம், கவனம் செலுத்த முடியாமை, சிந்தனைத் திறன் குறைவு போன்ற பிரச்சனைகள் அதிகம் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிலரிடம் தனிமை உணர்வு அதிகரிப்பதும், மனச்சோர்வுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற 71 ஆய்வுகளின் முடிவுகளை ஆய்வாளர்கள் ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்தபோது இந்த விளைவுகள் உறுதிப்படுத்தப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகள் சைகலாஜிக்கல் புல்லட்டின் என்ற அமெரிக்க மனநல அமைப்பின் ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல், 14 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்த மற்றொரு ஆய்விலும் இவையாவும் உறுதியாகியுள்ளது.

குறுகிய நேர வீடியோக்கள் வெறும் மனநலத்தை மட்டுமல்ல, சமூக உறவுகளையும் பாதிக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உடலுழைப்பு குறைவதுடன், நேரடியாக மனிதர்களுடன் பேசும் ஆர்வம் குறைகிறது. சமூகத் தொடர்புகளில் தயக்கம் உருவாகிறது. இதனால் ஒருவர் தனிமையில் மூழ்கி, காலப்போக்கில் மனச்சோர்வுக்கு ஆளாகும் அபாயம் அதிகரிக்கிறது.

நியூரோ இமேஜ் என்ற இதழில் வெளியான ஒரு ஆய்வில், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படும் மூளை நரம்பு பாதைகளையே இந்த குறுகிய வீடியோக்களும் பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணர்ச்சி கட்டுப்பாட்டில் சிக்கல்கள், கவனமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இரவில் படுக்கையில் படுத்துக்கொண்டு மொபைல் பார்ப்பது மூளையின் இயல்பான ரிதத்தை குழப்புகிறது. இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு, மறுநாள் சோர்வுடனும் கவனக்குறைவுடனும் இயங்க வேண்டிய சூழல் உருவாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறுகிய நேர வீடியோக்களை பார்க்கும் போது மூளையில் டோபமைன் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன் திடீரென அதிகமாக சுரக்கிறது. இது நேரடியாக ஒருவருடன் பேசும்போது சுரப்பதை விட அதிகம். இதனால் மனம், “வீடியோ பார்ப்பதே உண்மையான மகிழ்ச்சி” என்று நம்பத் தொடங்குகிறது. இதனால் நேரடி மனித தொடர்புகள் சுவாரஸ்யமற்றதாக மனம் உணரும். இது ஆபத்தான போக்கு என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.