ராம்ராஜ் காட்டன் சார்பில், ‘ராம்ராஜ் ஒயிட் வாரியர்ஸ் மாரத்தான்’ திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராம்ராஜ் காட்டன் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட மாரத்தானில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நல்லூர் சரக துணை போலீஸ் சூப்பிரெண்ட் தையல் நாயகி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாரத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தார். வஞ்சிப்பாளையம் சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய மாரத்தானில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடைபெற்றன. அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி பற்றி ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் பேசுகையில், ராம்ராஜ் ஒயிட் வாரியர்ஸ் மாரத்தான் என்பது வெறும் ஓட்டப்பந்தயம் மட்டுமல்ல; இது ஒழுக்கம், ஆரோக்கியம், சமூக மதிப்புகளின் கொண்டாட்டமாகும்.

ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். குடும்பங்கள் ஒன்றாக பங்கேற்கும் போது, அவர்களுக்குள் உறவு பலப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமான, ஊக்கமான மனிதர்களால்தான் ஒரு சிறந்த நிறுவனத்தை உருவாக்க முடியும் என்று பேசினார்.
