ஆகஸ்ட் 9 முதல் 13 வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது
கடந்த 57 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 58-வது கூடைப்பந்து போட்டிகள் வரும் 2024 ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது.
இதுகுறித்து பி .எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ்ணன், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ருத்ர மூர்த்தி மற்றும் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- இவ்வாண்டு 58-வது ஆண்கள் பி.எஸ்.ஜி. கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்ட் 9 – ம் தேதி முதல் 13 – ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் அனுமதியுடனும், தமிழ்நாடு கூடைப்பந்துகழக குறியீட்டு எண்ணுடனும் நடைபெறவுள்ளது.
இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த போட்டியில் பங்கு பெற்று விளையாட எல்லா அணிகளும் ஆர்வமாக இருப்பார்கள். இதில் அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் சூழல் முறையிலும். பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.
58 – வது பி.எஸ்.ஜி. கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் எ – பிரிவில் சென்னை – வருமாண வரி துறை அணி, சென்னை – இந்தியன் வங்கி அணி, பெங்களூரு – பேங்க் ஆஃப் பரோடா அணி, புதுதில்லி – மத்திய செயலக அணிகளும், பி – பிரிவில் புதுதில்லி – இந்திய இராணுவ அணியும், புதுதில்லி – இந்தியன் இரயில்வே அணியும், கேரளா – கேரளா மாநில மின்சார வாரிய அணியும், சென்னை – லயோலா கல்லூரி அணி, உட்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. குறிப்பாக இப்போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் 6 வீரர்கள் அவரவர் அணிக்காக விளையாடுகின்றனர்.
வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000 மற்றும் பி.எஸ்.ஜி. சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.75,000 மற்றும் கோப்பை, அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ. 50,000 மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு 25,000 மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000 பரிசாக வழங்கப்படும்.
போட்டிகள் வரும் 09.08.2024 முதல் தினமும் மாலை 5 மணிக்கு துவங்கும். கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்போட்டிகளை துவக்கி வைக்கிறார். கௌரவ விருந்தினராக பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் பிரகாசம் கலந்து கொள்கின்றார். பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி முன்னிலை வகிக்கிறார்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியாளர் கிராந்திகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்குப் பரிசுகளை வழங்குகிறார். பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றார்.