கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.
இதில் செந்தில் பாலாஜி பேசியதாவது: பாஜக கடந்த பாராளுமன்ற தேர்தலில் மெட்ரோ ரயில் திட்டம் வாக்குறுதி கொடுத்தது. விரிவான திட்ட அறிக்கை கடந்த 15 மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதை நிராகரித்துள்ளனர். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் ஐந்து மாதங்களில் விரிவான அறிக்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரிக்க மக்கள் தொகையை காரணம் காட்டி உள்ளார்கள். ஆக்ரா, பிகார், போபால் போன்ற இடங்களுக்கு மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி கொடுத்தவர்கள், இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வந்து விடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையோடு மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் வந்து திருக்குறளை பேசியும், தமிழில் பேசியும், ஏதோ தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பது போல் பேசி ஏமாற்றி வருகிறார்கள். கோவையில் பிரதமர் மோடி பீகாரின் வாசம் கோவையில் வீசுகிறது என்று கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் கோவையில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தோமே என்ற கூச்சமே இல்லாமல் பேசியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை மக்கள் 10 தொகுதிகளில் ஜெயிக்க வைத்தனர். அப்படிப்பட்ட மக்களுக்கு மெட்ரோ திட்டத்தை கொடுக்க மனம் இல்லாத அரசு மோடி அரசு. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்துவார் என பேசினார்.
