கோவை மேற்கு புறவழி சாலை (பை-பாஸ்) பகுதி வழியே வரக்கூடிய அறிவொளி நகர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சாலை விபத்தை அடுத்து அந்த இடத்தில் பை-பாஸ் சாலையை பயன்படுத்தி வாகனங்கள் செல்ல முடியாத படி தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதி இந்த புறவழி சாலையின் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் இருந்து காலை 10 மணி – 10.30 மணிக்குள் வெளியே வந்த பயணிகள் ஆட்டோ ஒன்று, சிறு ரக கூட்ஸ் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த ஆட்டோவில் பயணித்த 22 வயது கல்லூரி மாணவி – வி.நிர்மலா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை அடுத்து, அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், இது போல இனி ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க சுரங்க பாதை அல்லது மேம்பாலம் போன்ற வசதி அறிவொளி நகர் சந்திப்பில் ஏற்படுத்தப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். காலை முதல் மாலை வரை கலைந்து செல்லாமல் அவர்கள் போராடினர்.

BYPASS 2

இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை துறையின் கோவை மண்டல கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கோட்டப் பொறியாளர் ஞானமூர்த்தி,  நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளருக்கு 13ம் தேதி எழுதிய கடிதத்தில், பொதுமக்களின் கோரிக்கையான வாகன சுரங்கப் பாதையை அமைக்கும் பணிக்கு ரூ.2.4 கோடி  தேவைப்படும் எனவும் அதற்கான மதிப்பீட்டை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அறிவொளி நகர் சந்திப்பில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சாலையின் 2 பக்கமும் வேகத்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முழு சாலையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வழி தற்காலிகமாக பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அங்கே நிரந்தரமாக ஒரு ரவுண்டானாவோ, போக்குவரத்து சிக்னல் அல்லது மக்கள் எதிர்பார்க்கும் பாலம், சுரங்க பாதை வசதிகள் அமைக்கப்படும் வரை இந்த தடுப்புகள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட சாத்தியக்கூறு உள்ளதா என மாநில நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

BYPASS 3

வழக்கமாக அந்த பகுதி மற்றும் அதன் அருகே இருக்கும் பகுதிகள், குடியிருப்புகளில் இருந்து மக்கள் பிற இடங்களுக்கு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த வழி பயன்பாட்டில் உள்ளதால் வாகன போக்குவரத்து பாதிப்படையவில்லை.

வேண்டுகோள்
உயிரிழந்த நிர்மலாவின் தந்தை விஸ்வநாதன், இந்த வழியே உரிமம் இல்லாத வாகனங்கள் அதிகம் இயங்குவதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் குற்றம் சாட்டினார். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.