தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தொடர்பாக சமூக செயற்பாட்டாளரும், வெள்ளலூர் பகுதி அருகில் வசித்து வரும் குடியிருப்பாளருமான K.S. மோகன் என்பவர்  வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கின் காரணமாக 12.01.2026 அன்று நடைபெற்ற விசாரணையில் நீதியரசர்கள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை பிரதிவாதியாக இணைத்து, 6 வாரங்களுக்குள் குப்பைக் கிடங்கை ஆய்வு செய்து, 28.02.2026க்கு முன்பாக ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதன் காரணமாக அந்த ஆய்வு பிப்.12,13 ஆகிய தேதிகளில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நடைபெற்றது.

இந்த நிலையில் குப்பைக்கிடங்கில் நடைபெற்ற ஆய்வில் தான் பங்கேற்க, கருத்து தெரிவிக்க, சேகரிக்கப்பட்ட தரவுகளை அறிந்து கொள்ள, ஆய்வு செயல்முறையை பார்வையிட முயன்றபோது  தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறிய மோகன், குப்பைக்கிடங்கால் பாதிக்கப்பட்டோரையும் கட்டாயமாக இணைத்து வெளிப்படையான மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் அவர் அந்த கடிதத்தில், இந்த ஆய்வு தொடர்பாக  சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் பொதுமக்கள் அறிய வெளியிடப்பட வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல அமர்வுக்கும் கடிதமாக எழுதியிருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதியின் தனி செயலர் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு இது தொடர்பாக  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மனு தொடர்பாக உரிய கவனம் செலுத்தவும் எடுக்கவும், நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை மனுதாரருக்கு நேரடியாக தெரிவிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.