கோவை மேற்கு புறவழி சாலை அருகே அமைந்துள்ள அறிவொளி நகர் பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான முதற்கட்ட பணிகள் வேகம் எடுத்துள்ளன.
மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி அறிவொளி நகர். இது கோவை மேற்கு புறவழி சாலை அருகே அமைந்துள்ளது. இந்த 2 பகுதிகளும் சந்திக்கும் இடத்தில் சுரங்கப்பாதையோ அல்லது மேம்பாலமோ அவசியம் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்ற மாதம் 13ம் தேதி அறிவொளி நகரை சேர்ந்த நிர்மலா தேவி எனும் 19 வயது கல்லூரி மாணவி இந்த சந்திப்பு பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இதன் பின்னர் சுரங்கப்பாதை/மேம்பாலம் வேண்டுமென அப்பகுதி மக்கள் போராடினர்.
இதையடுத்து சுரங்கப்பாதை கட்டுவதற்கான முன்மொழிவு அதற்கான மதிப்பீடுடன் நெடுஞ்சாலை துறை மூலம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என கோவை கலெக்டர் தெரிவித்திருந்தார்.மேலும் மேற்கு புறவழி சாலை – அறிவொளி நகர் பகுதி அருகே சாலை பாதுகாப்பை மேம்படுத்த அப்பகுதிகளில் வேகத்தடை, ரவுண்டானா, மையத்தடுப்பு, ட்ராபிக் சிக்னல் வசதிகள் வழங்கப்பட்டன.
தற்போது சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான முதற்கட்ட பணிகள் வேகம் எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரூ.2.5 கோடி மதிப்பில் இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு பகுதி அருகே சுரங்கப்பாதை அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான இறுதி மதிப்பீடு கூடுதலாக இருக்கலாம் எனவும், தேவைப்பட்டால் தற்போது உள்ள சாலை பகுதிகளிலும் மாற்றங்கள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
