ஆசிய தொழில்நுட்ப நிறுவனம், எவர்கிரீன் கல்வி குழுமம் ஆகிய கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் ‘இந்தோ-ஏஐடி கூட்டு மாநாடு 2025’ கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஐடிசி வெல்காம் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக டிட்கோ நிர்வாக இயக்குநர் ஸ்வேதா சுமன் பங்கேற்றார்.
ஏஐடி கல்வி நிறுவனத்தின் நானோ தொழில்நுட்பத்துறையின் இயக்குனர் பிரானேஷ், காலநிலை மாற்றத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெய் கோவிந் சிங், எவர்கிரீன் கல்வி குழுமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் தர்மலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாடு தொழில்நுட்ப நிறுவனத்தில் வழங்கப்படும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்கும் வகையில் நடத்தப்பட்டது.
ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கின் நகருக்கு அருகே அமைந்துள்ள சர்வதேச முதுகலை கல்வி நிறுவனமாகும். இங்கு பொறியியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், நிலையான வளர்ச்சி, மேலாண்மை ஆகிய துறைகளில் முதுகலை, முனைவர் பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மேற்படிப்புகள் ஆகியன வழங்கப்படுகின்றன.
இது முழுக்க முழுக்க இலாப நோக்கமற்ற கல்வி நிறுவனமாக செயல்படுகின்றது, கல்வி உதவித் தொகையின் மூலமே மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றன.
நிகழ்ச்சியில் ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் பல்துறை பேராசியர்கள், எவர்கிரீன் கல்வி குழும நிர்வாகிகள் பங்கேற்று இது தொடர்பாக விரிவாக விளக்கினர்.
