கோவை, வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினை கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பு இணைந்து துவங்கினர்.
வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், வளாகத்தை சுற்றிலும் சுமார் 4200 மரக்கன்றுகள் மற்றும் சாலையில் இருபுறமும் சுமார் 800 மரக்கன்றுகள் நடப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பின் சார்பில் உரக்கிடங்கு வளாகத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில், சுமார் 25,000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் திங்கட்கிழமை (07.04.2025) துவக்கி வைத்தார்.
இதில் வேம்பு, பூவரசன், மருதம், புங்கன், இலுப்பை, மற்றும் வாகை உள்ளிட்ட சுமார் 64 வகையான நாட்டு ரக மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகத்தில் உள்ள குட்டை (LAGOON) நீர்த்தேக்கம் மேற்கொள்ளும் வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல குழுத்தலைவர் தனலட்சுமி, உதவி நகர்நல அலுவலர் பூபதி, ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர், உதவி பொறியாளர், சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் சதீஷ், தலைமை ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.