நிலைத்தன்மை சான்றிதழ் அளிக்காததால் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், உடனடியாக தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என்று, திமுக அரசை, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவையின் பழமையான மற்றும் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 29ஆம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, நடராஜர் ஆகியோர் எழுந்தருளும் ஐந்து தேர்களின் நிலைத்தன்மை குறித்து பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) உதவி செயற்பொறியாளர் மோகனசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் முடிவில், சோமாஸ்கந்தர் மற்றும் பச்சைநாயகி அம்மன் தேர்கள் பாதுகாப்பாக இல்லை எனக் கண்டறியப்பட்டதால், அவற்றுக்கு நிலைத்தன்மை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் தேர் வடம் பிடித்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
தொடர்ந்து, கலெக்டர் பவன்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தேரோட்டம் நடத்த இயலாது என முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, சுவாமிகள் தங்கம் மற்றும் வெள்ளி சப்பரங்களில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, சோமாஸ்கந்தர் தேர் நூற்றாண்டுகள் பழமையானது என்பதால் புதிய தேர் அமைக்கும் பணிக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு பூஜை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர தேர்த் திருவிழா, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஆன்மிக மரபாகும்.
இந்த ஆண்டு, பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, வரும் மார்ச் 29 அன்று தேர்த்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரி, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து, தடை விதித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் கடும் கண்டனத்துக்குரியது.
ஆட்சி போகும் தருவாயிலும், பக்தர்கள் மனம் புண்படும்படி, நூற்றாண்டுகள் பழமையான பங்குனி உத்திர தேர்த்திருவிழாவைத் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
உடனடியாக தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.
