ஈஷா காவேரி கூக்குரல் வழிகாட்டுதலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரம் நடும் ‘ஒரு கிராமம் ஓர் அரசமரம்’ திட்டத்தினை அரவிந்தர் கல்வி குழும செயலாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார்.
கலசப்பாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில், ‘ஒரு கிராமம் ஓர் அரசமரம்’ திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள 2500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரச மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
பேரூராதீனம் 24-ஆவது குரு மகாசன்னிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரலின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் அரச மரம் நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டம்’ மாவட்ட வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தி. மலை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, அரவிந்தர் கல்வி குழும செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கி, முதல் அரச மரக்கன்றை நட்டு திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அருளுரை வழங்கிய பேரூராதீனம் 25-ஆம் குருமகா சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரச மரத்தின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். ஈஷா காவேரி கூக்குரல் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.
