கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி காலை 7:10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மலை ரயில் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் 4 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அதிகப்படியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதிலும் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் உள்ளிட்ட பண்டிகை கால தொடர் விடுமுறைகளின் பொழுது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். ஆகவே சுற்றுலா பயணிகளின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை வரும் டிசம்பர் 25, 27, 29, 31 ஆகிய தேதிகளிலும், ஜனவரி மாதம் 2 4,15, 17, 23, 25 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில் குறிப்பிட்ட தேதிகளில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டிக்கு சென்றடையும்.
இதேபோல் ஊட்டி ரயில் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு டிசம்பர் 26, 28, 30 ஆகிய தேதிகளிலும், ஜனவரி மாதம் 1, 3, 5, 16, 18, 24, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளன.
இந்த மலை ரயில்கள் குறிப்பிட்ட தேதிகளில் ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்து காலை 11:25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு மாலை 4:20 மணிக்கு வந்தடையும். இதனிடையே மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே முதல் வகுப்பு 40 இருக்கைகள், 2ஆம் வகுப்பு 140 இருக்கைகளும் இருக்கும்.
இதேபோல் குன்னூர் – ஊட்டி இடையே முதல் வகுப்பு 80 இருக்கைகளும், 2ஆம் வகுப்பு 140 இருக்கைகளும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
