கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) கஹலம் என்னும் பெயரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் நிறுவனர் தலைவர் பொங்கலூர் பழனிசாமி பேசுகையில்: ஓணம், ஒற்றுமை, பகிர்வு, வாழ்வின் அருள்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பழக்கத்தை நமக்குக் கற்பிக்கிறது. இது ஒரு பண்டிகை மட்டுமல்ல, பாரம்பரியத்துடனும் சமூகத்துடனும் மீண்டும் இணையும் வழியாகும் என்றார்.

துணைத்தலைவர் இந்து முருகேசன் தனது வாழ்த்துரையில், மனிதர்களுக்கிடையேயான பாசப்பிணைப்பையும் சமூக ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துகின்றன. இத்தகைய விழாக்கள் மாணவர்களுக்கு கலாச்சார விழிப்புணர்வையும் சமூக பொறுப்புணர்வையும் வளர்க்கின்றன. பண்டிகைகள் மகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, மரபையும் பண்பாட்டையும் காக்கும் வாயிலாகவும் திகழ்வதாக தெரிவித்தார்.

மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். திருவாதிரகளி, ஓணப்பாட்டு, பாரம்பரிய மற்றும் நவீன நடனங்கள், கேரள நாட்டுப்புறக் கதைகளை பிரதிபலிக்கும் நாடகங்கள், ஸ்டாண்ட்-அப் காமெடி, செண்டை மேளம் ஆகியவை இடம்பெற்றன.

விழாவில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், துணை முதல்வர் மைதிலி, பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.