எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்கள், இந்திய மருத்துவக் கழகம் கோவை கிளை, பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை மற்றும் ஐஸ்வர்யா மருத்துவமனை இணைந்து, எஸ்.என்.எஸ் கல்வி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தின.
வரும் செப்., 29, 30ல் நடைபெற உள்ள GDTA D’Con ’26 நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக நடந்த இந்நிகழ்ச்சியில், 2,074 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கேற்று அடிப்படை உயிர்காக்கும் முறைகள் குறித்து பயிற்சி பெற்றது ஒரு உலக சாதனையாகவும், தனிநபர் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையிலானோர் பங்கேற்றது மற்றொரு உலக சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த எலைட் உலக சாதனை நிறுவனம் இரு சாதனைகளையும் அங்கீகரித்தது.
நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், அவசர காலங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய அடிப்படை முறைகளை மாணவர்கள் நேரடியாக பயிற்சி பெற்றனர்.
இந்திய மருத்துவக் கழகம் கோவை கிளை தலைவர் டாக்டர் கோஷல் ராம் பேசுகையில், இளம் தலைமுறையினர் உயிரைக் காப்பாற்றும் அடிப்படை திறன்களை கற்றுக்கொள்வது மிகவும் அவசியம் என்றார்.
எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப இயக்குனர் நளின் பேசுகையில்: மாணவர்களை சமூக அக்கறை கொண்டவர்களாக உருவாக்க எஸ்.என்.எஸ் கல்விக் குழுமங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதில் உலக சாதனை படைத்திருப்பது பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் இந்திய மருத்துவக் கழகம் கோவை கிளையின் மகளிர் மருத்துவர்கள் பிரிவு தலைவர் டாக்டர் அனுஷா கோஷல் ராம், எலைட் உலக சாதனை நிறுவன தூதர் ரக்ஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
