என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் 72வது நிறுவனர் நாள் மற்றும் 52வது ஆண்டு பட்டமளிப்பு விழா, பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் நூற்றாண்டு நினைவுக் கூடத்தில், சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் 2004-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் புகழ்பெற்ற கொங்கு நாட்டு சாதனையாளர் விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டது. சமூக சேவை மற்றும் சமுதாய வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த பத்மஸ்ரீ விருதாளரும், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் இயக்குநருமான கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவின் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற தொண்டு நிறுவனரும், புத்தகப் பதிப்பாளருமான ஸ்டாலின் குணசேகரன், கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன், மாணவர் மற்றும் கல்வி நிர்வாக வசதிக்காக ‘என்.ஐ.ஏ கேம்பஸ் ஆப்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் சகீலாவுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. பொள்ளாச்சி ஜெர்மன் ஆப்டிகல்ஸ் மருத்துவர் ராஜன் ஜோசப், ஸ்ரீ குப்பாண்டா கவுண்டர் தொடக்கப்பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

வரவேற்புரை வழங்கிய செயலர் சுப்ரமணியன், கல்வி மற்றும் நெறிமுறைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார். என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் சக்தி சுகர்ஸ் லிட். செயல் தலைவர் மாணிக்கம் பேசுகையில், திறன் மேம்பாடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய கல்வியை வழங்குவதன் மூலம், சமூக மாற்றத்திற்கான முன்மாதிரியாகத் திகழ்வதே எங்கள் நோக்கம் என வலியுறுத்தினார்.

விழாவில் முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.