கோவையில் 2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மாநகராட்சியில் 1.11 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. 2018ம் ஆண்டில் 46,292 தெரு நாய்கள் இருந்த நிலையில், 2022ல் இதன் எண்ணிக்கை 1,11,074 அதிகரித்தது.

தெரு நாய்களுக்கு ரேபிஸ் ஏற்படுவதை தடுக்க ‘மிஷன் ரேபிஸ்’ எனும் திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உள்ள அனைத்து தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மிஷன் ரேபிஸ் 2013 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் கோவாவில் பத்து வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி ரேபீஸ் நோய்கான தடுப்பூசி தொடர்பான உதவிகள் பெறவும் மற்றும் ரேபீஸ் நோய்க்கான விபரங்களை பொதுமக்கள் பெறும் வகையில் உதவி எண்ணை (98437 89491) அறிமுகப்படுத்தியுள்ளது.

மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் மிஷன் ரேபிஸ் திட்டத்தின் கீழ் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு, வீட்டில் வளர்க்கு செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவற்றுக்கும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம்.

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உக்கடம், ஒண்டிப்புதூர், சீரானநாயக்கன்பாளையம், வெள்ளலூரில் மாநகராட்சி கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் மூன்று கருத்தடை மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023 முதல் சுமார் 25,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தெரு நாய்களின் எண்ணிக்கையில் ஒரு சிறிய பகுதியே. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயை தடுக்கவும் தீவிரமாக மாநகராட்சி செயல்பட்டு வருகிறது எனக் கூறினார்.