அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (7.4.2025) சென்னையில் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் டி.வி.எச் கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர் ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மகன் அருண் நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கே.என்.நேருவின் மற்றொரு சகோதரரான மணிவண்ணன் வீடு கோவை, சிங்காநல்லூர் அருகில் உள்ள மசக்காளிபாளையம் டி.வி.எச்.ஏ. காந்தா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இன்று காலை அவரது வீட்டிற்கும் 3 கார்களில் வந்து உள்ள அமலாக்க துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டி.வி.எச் நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ட்ரூ வேல்யு ஹோம் என்ற பெயரில் கட்டுமான குடியிருப்புகள் டி.வி.எச் கட்டுமான நிறுவனம் சார்பில் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உட்பட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதை மணிவண்ணன் தான் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.