ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 உலக உறுப்பு தான தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நேரடி கல்லீரல் உறுப்பு தானம் செய்தவர்களை கௌரவித்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் பங்கேற்றார். மருத்துவமனையின் மயக்கவியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பிரேம் சந்தர் வரவேற்புரை வழங்கினார்.

விழாவின் ஒரு பகுதியாக, பிறருக்கு மீண்டும் உயிர் வாழும் வாய்ப்பை வழங்கிய உயிருடன் கல்லீரல் தானம் செய்தவர்களின் தாராள மனப்பான்மையையும் தன்னலமற்ற பணியையும் மருத்துவமனை பாராட்டியது. நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக உறுப்புகளை பெற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உணர்ச்சிகரமான வாழ்க்கைப் பயணத்தையும், நன்றியையும் பகிர்ந்தனர்.

அலைட் ஹெல்த் சயன்ஸ் மாணவர்கள் உறுப்பு தானம் குறித்து ஃப்ளாஷ் மாப் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்களான ஆனந்த் பரதன்,  கேசவன்,  ஜெயபால் மற்றும் பிரேம்சந்தர் ஆகியோருக்கு மருத்துவமனை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.