கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் வணிகவியல் துறையின் வணிகப்பகுப்பாய்வுப் பிரிவும், ஜெர்மனியின் ஆஸ்ட்ஃபாலியா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மலேசியாவின் செகி பல்கலைக்கழகம் ஆகியவையும் இணைந்து ‘ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவுப் பகுப்பாய்வு’ பன்னாட்டுக் கருத்தரங்கை 23.08.2024 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வணிகவியல் துறையின் வணிகப்பகுப்பாய்வுப் பிரிவுத் துறைத்தலைவர் முனைவர் ஜி.வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். வணிகவியல் புலமுதன்மையர் முனைவர் கு.குமுதாதேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்விற்குக் கல்லூரிச்செயலர் திருமதி காயத்ரி அனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் பி.கீதா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

மலேசிய செகி பல்கலைக்கழக வணிகம், கணக்கியல், சட்டம் முதலிய துறைகளின் புலமுதன்மையர் முனைவர் ஸ்டீபன் சேசய்யா அவர்கள் ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள், பல்வேறு தொழில்களில் அதன் சாத்தியமான பயன்பாடுகள் பற்றி விரிவுரையாற்றினார். ஜெர்மனியின் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மற்றும் சேவை மேலாண்மைத்துறைப் பேராசிரியர் முனைவர் மார்கஸ் ஏ லானர் அவர்கள் பகுப்பாய்வு உலகத்தில் சேவை மேலாண்மை, ஆட்டோமோட்டிவ் மற்றும் ஃபின்டெக் ஆகியவற்றில் ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவின் பங்கை எடுத்துரைத்தார்.
மலேசிய செகி பல்கலைக்கழக வணிகம், கணக்கியல், சட்டப் புலத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் தினேஸ்வரி நடராஜன், கணக்கியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ரவீந்தரன் சீனியசாமி, சட்டத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் லாவன்யா ராமகிருஷ்ணன், கே.பி.ஆர். கல்லூரியின் கணினி அறிவியல் புல முதன்மையர் முனைவர் பி.சர்மிளா ஆகியோர் அமர்வுத் தலைவர்களாக இருந்தனர். சிறந்த கட்டுரையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

மலேசியாவின் செகி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 4 பேராசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களும் மலேசியாவின் ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 பேராசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் 48 நிறுவனங்கள், 18 பிற பல்கலைக்கழகங்களிலிருந்து சுமார் 1000 கட்டுரையாளர்களும் ஆய்வறிஞர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.